

சபரிமலை,
சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய வார நாட்களில் தினசரி 1,000 பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் 2 ஆயிரம் பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
சாமியை தரிசிக்க, பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று அனைத்து தரப்பிலும் கோரிக்கை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2-ந்தேதி முதல் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனாலும் கடந்த ஆண்டை போல் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், சபரிமலைக்கு வரும் வருமானம் மிகவும் குறைந்து உள்ளது. கடந்த மாதம் 15-ந் தேதியில் இருந்து 23 நாட்களில் நடை வருமானமாக ரூ.3 கோடியே 82 லட்சம் மட்டுமே கிடைத்து உள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாததால், சபரிமலைக்கு பக்தர்கள் வந்து குவிந்தனர். அதைத்தொடர்ந்து கோவில் நடை திறந்து 23 நாட்களில் நடை வருமானமாக ரூ.66 கோடி கிடைத்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, ரூ.62 கோடி வருவாய் குறைந்துள்ளது.
இதுபற்றி திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறும்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் சபரிமலையில் பராமரிப்பு செலவாக நாள் ஒன்றுக்கு ரூ.38 லட்சம் வரை ஆகிறது. தற்போது கிடைத்துள்ள நடை வருமானம் அன்றாட செலவுக்கு பாதியாகத்தான் உள்ளது. இதனால் தேவஸ்தான தினசரி செலவுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என்றார்.