

புதுடெல்லி,
மத நம்பிக்கைகளில் கோர்ட்டு தலையிடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், ஏ.எம்.கன்வில்கர் ஆகிய நால்வரும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.
ஆனால் பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதாவது, அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதற்கு, மாறாக அவர் தீர்ப்பு கூறினார்.
இதனால் பெரும்பான்மையான தீர்ப்பின் அடிப்படையில், அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதி அளித்த தீர்ப்பே இறுதியானதாக அமைந்தது.
நீதிபதி இந்து மல்கோத்ரா வழங்கிய தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
இந்த வழக்கு அதன் தன்மையின் அடிப்படையில் விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல. மனுதாரர்கள் மற்றும் இந்த வழக்கில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள் விவாதிக்கும் குறைபாடுகளை நியாயப்படுத்த முடியாது.
அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமத்துவத்துக்கான உரிமை என்ற பெயரில், அதே அரசியல் சட்டம் வழங்கும் ஒரு தனி மனிதனின் மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் குறுக்கிட முடியாது.
சபரிமலை அய்யப்பன் கோவில் தொடர்பான இந்த வழக்கில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயங்கள் மற்ற மத வழிபாட்டு தலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒரு குறிப்பிட்டுள்ள வயது வரம்புக்குள் அடங்கும் பெண்கள் கோவிலுக்கு செல்வதை கட்டுப்படுத்தும் ஆலய நிர்வாகத்தின் நடவடிக்கை அரசியல் சட்டப்பிரிவு 17-ன் கீழ் வராது. மதரீதியான நடைமுறைகளை அந்த மதம் சார்ந்த சமூகம்தான் தீர்மானிக்க வேண்டும். கோர்ட்டு அதனை தீர்மானிக்க முடியாது.
உடன் கட்டை ஏறுதல் போன்ற சமூகத்தை பாதிக்கும் நடைமுறைகள் தவிர, ஏனைய ஆன்மிக சடங்கு சம்பிரதாய விஷயங்களில் ஆண்- பெண் சமத்துவம் என்ற பெயரில் நீதிமன்றம் தலையிட தேவையில்லை. ஆழமான மத நம்பிக்கைகளில் கோர்ட்டுகளின் தலையீடு கூடாது.
சபரிமலை வழிபாட்டுத்தலம், அய்யப்பன் விக்கிரகம் ஆகியவற்றின் அடிப்படை உரிமைகள், இந்திய அரசியல் சட்ட பிரிவுகள் 25 மற்றும் 26-ன் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு மதங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் அவரவர் மதநம்பிக்கைகளை பின்பற்ற அனுமதிக்கவேண்டும். மதரீதியான பழக்க வழக்கங்களுடன் பெண்களுக்கான சமஉரிமையை தொடர்புபடுத்த முடியாது.
பகுத்தறிவு கருத்தியல் அடிப்படையில் மத நம்பிக்கைகளில் யாரும் குறுக்கிட முடியாது. பகுத்தறிவு கருத்துகளை மதநம்பிக்கையில் திணிக்க முடியாது. அதே நேரத்தில் மத நம்பிக்கை மற்றும் அரசியல் சட்டம் வரையறுத்துள்ள சமத்துவம் மற்றும் பாகுபாட்டை களைதல் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு சமநிலையை கடைப்பிடிக்க வேண்டிய தேவையும் உள்ளது.
குறிப்பிட்ட பிரிவு அல்லது மதத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் அந்த வழக்கில் இல்லாதவரை, கோர்ட்டு அந்த விஷயத்தில் தலையிட முடியாது.
அய்யப்ப பக்தர்கள் தனித்தன்மை உள்ள மத அடையாளம் கொண்டவர்கள். தனித்த அடையாளம் காணும் அளவுக்கு அவர்களுடைய அடையாளங்கள் மற்றும் நம்பிக்கைகள் தனித்து விளங்கினால் அவர்களை தனிப்பட்ட மதநம்பிக்கை கொண்ட குழுவாகத்தான் கருத வேண்டும்.
இவ்வாறு நீதிபதி இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.