கடவுளை காண உயிர்த்தியாகம்! 21 பேர் அறிவிப்பால் பரபரப்பு


கடவுளை காண உயிர்த்தியாகம்! 21 பேர் அறிவிப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Aug 2025 3:45 AM IST (Updated: 25 Aug 2025 3:45 AM IST)
t-max-icont-min-icon

ராம்பால் என்ற சாமியார் கடந்த 2014-ம் ஆண்டு கலவர வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

கடவுள் மீதான நம்பிக்கை என்பது ஆன்மிகம். ஆனால் சிலர் இன்றளவும் மூடநம்பிக்கை கொண்டுள்ளனர். அதற்கு எடுத்துக்காட்டாக பல சம்பவங்களை கூறலாம். அக்காலத்தில் கல்வி அறிவு இல்லாத காரணத்தால் மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கி இருந்ததாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது நவீன காலத்தில் அதாவது மனிதன் விண்ணுலகிற்கு சென்று மீண்டும் அங்கிருந்து திரும்பி வரும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ள நிலையிலும் மக்கள் மூடநம்பிக்கையுடன் இருப்பதுதான் வேதனை அளிக்கிறது. அதுபோல் ஒரு சம்பவம் தான் கர்நாடகத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா சிக்கோடி அருகே அனந்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்த துகாராம், சாவித்திரி, ரமேஷ் மற்றும் வைஷ்ணவி உள்பட 21 பேர் உயிர்த்தியாகம் செய்ய இருப்பதாகவும், அவர்கள் கடவுளை காண்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தகவல் பரவியது. இதுபற்றி சமூக வலைதளங்கள், ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகி வைரலானது.

அதையடுத்து போலீசார் மற்றும் அப்பகுதியில் உள்ள மடாதிபதி ஆகியோர் வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

அதாவது சந்தா ராம்பால் என்ற சாமியார் கடந்த 2014-ம் ஆண்டு கலவர வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் எழுதிய புத்தகத்தைப் படித்த துகாராம் உள்பட 21 பேரும் கடவுளை தேடி உயிர்த்தியாகம் செய்ய முன்வந்துள்ளனர்.

அதன்படி வருகிற 8-ந் தேதி ‘உன்னத கடவுள் பூமிக்கு வர உள்ளார், அவர் அனைவரின் உயிரையும் எடுக்க உள்ளார்’ என்று துகாராம் உள்பட 21 பேரும் மக்களிடையே பிரசாரம் செய்து வந்துள்ளனர். மேலும் அன்றைய தினம் தாங்கள் 21 பேரும் கடவுளை காண்பதற்காக உயிர்த்தியாகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்து வந்துள்ளனர்.

இதில் துகாராம், சாவித்திரி, ரமேஷ் மற்றும் வைஷ்ணவி ஆகிய 4 பேரை தவிர மீதி 17 பேர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. அதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் அவர்கள் 21 பேரும் உயிர்த்தியாகம் செய்வதில் இருந்து பின்வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story