

புதுடெல்லி,
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ஆண்டுதோறும் புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதைப்போல இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஷ்கார்), சிறார்களுக்காக எழுதப்படும் சீரிய படைப்புகளுக்கும் (பால சாகித்ய புரஷ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு செப்பு பட்டயத்துடன், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.
2018-ம் ஆண்டுக்கான யுவ புரஷ்கார் மற்றும் பால சாகித்ய புரஷ்கார் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மொத்தம் 21 பேருக்கு யுவ புரஷ்கார் விருதும், 23 பேர் பால சாகித்ய புரஷ்கார் விருதும் பெறுகின்றனர். இதில் 2 பிரிவிலும் தமிழக எழுத்தாளர்கள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அம்பு படுக்கை என்ற சிறுகதை நூலுக்காக எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனுக்கு யுவ புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர்.
சிறகு முளைத்த யானை என்ற கவிதை நூலை எழுதிய கிருங்கை சேதுபதிக்கு பால சாகித்ய புரஷ்கார் விருது வழங்கப்படுகிறது. இவரும் சிவகங்கை மாவட்டம் கிருங்காக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
குழந்தைகள் தினமான நவம்பர் 14-ந்தேதி பால சாகித்ய புரஷ்கார் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் யுவ புரஷ்கார் விருது வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சாகித்ய அகாடமி கூறியுள்ளது.