நச்சுத்தன்மையுள்ள 'ஊமத்தங்காய்' விற்பனை: அமேசான், இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் உணவு உரிமங்கள் ரத்து

மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளின்படி, ஊமத்தை மனிதர்கள் உட்கொள்ள தகுதியற்றது.
அமேசான், இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் உணவு உரிமங்கள் ரத்து
ஊமத்தங்காய்
Published on

பெங்களூரு,

நச்சுத்தன்மை வாய்ந்த ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகளை உணவுப் பொருளாக ஆன்லைனில் விற்பனை செய்ததற்காக அமேசான், ஸ்விகி, இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகிய முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களின் உணவு உரிமங்களை கர்நாடக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

பொதுமக்களுக்கு ஆபத்து

ஊமத்தை (Datura) என்பது மனித உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய கடுமையான நச்சுத்தன்மை கொண்ட ஒரு தாவரமாகும். மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளின்படி, இது மனிதர்கள் உட்கொள்ள தகுதியற்றது. ஆனால், இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களின் தளங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிம எண்களைப் பயன்படுத்தி, ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகளை மனித நுகர்வுக்கான உணவுப் பொருளாக பட்டியலிட்டு விற்பனை செய்து வந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.

அரசின் அதிரடி நடவடிக்கை

பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய இந்த விதிமீறல் தொடர்பாக, கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடந்த வாரம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. நிறுவனங்கள் அளித்த விளக்கங்கள் திருப்திகரமாக இல்லாததால், மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர் கே. சீனிவாஸ், அடுத்த உத்தரவு வரும் வரை அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகிய நிறுவனங்களின் உணவு உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த நிறுவனங்களுக்கு ஊமத்தையை விநியோகம் செய்த மொத்த விற்பனையாளர்களின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நிறுவனங்களின் தரப்பு

அமேசான் நிறுவனம் இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை. ஸ்விகி இன்ஸ்டாமார்ட் நிறுவனம் ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கூடுதல் அவகாசம் கோரியது. பிக்பாஸ்கெட் நிறுவனம் உடனடியாக ஊமத்தை விற்பனையை நிறுத்திவிட்டதாகவும், இனி வரும் காலங்களில் 'மனித நுகர்வுக்கு அல்ல' என்ற எச்சரிக்கை லேபிளுடன் மட்டுமே விற்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தது. உணவு பாதுகாப்பு விதிகளின்படி ஆன்லைன் தளங்கள் செயல்படுவதை உறுதி செய்ய, இனி வரும் நாட்களிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தொடரும் என கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com