தன்பாலின திருமண வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்னது இதுதான்..!

தன்பாலின ஜோடிகளின் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
தன்பாலின திருமண வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்னது இதுதான்..!
Published on

இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிபதிகள், 4 மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.

தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

திருமணம் என்பது நிலையானது மற்றும் மாறாதது என்று கூறுவது தவறான கருத்து. தன்பாலின திருமணம் தொடர்பாக நீதிமன்றத்தால் சட்டத்தை உருவாக்க முடியாது. சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் தேவையா? என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

விளைவுகளை முழுமையாக புரிந்துகொள்ள முடியாத குழந்தைப் பருவத்தில் பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்கு அனுமதி இல்லை என்பதை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளும் தன்பாலின ஜோடிக்கு எதிரான புகார் குறித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்வதற்கு முன்பு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்த வேண்டும்.

தன்பாலின ஜோடிகளின் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

தன்பாலின உறவு என்பது காலங்காலமாக அறியப்பட்ட ஒரு இயற்கை நிகழ்வு. அவர்களின் உரிமைகளை முடிவு செய்ய மத்திய அரசு குழு அமைக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல்  செய்த அறிக்கையை நீதிமன்றம் பதிவு செய்கிறது.

இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.

தன்பாலின ஜோடிகளுக்கு சில உரிமைகள் வழங்குவது குறித்து தலைமை நீதிபதியின் கருத்துடன் உடன்படுவதாக நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்தார். தன்பாலின ஜோடிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது திருமண சமத்துவத்தை நோக்கிய படியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மற்ற நீதிபதிகளான ரவீந்திர பட், ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.

சில விஷயங்களில் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துகளுடன் உடன்படுவதாகவும், சில விஷயங்களில் வேறுபடுவதாகவும் நீதிபதி எஸ்.ரவீந்திர பட் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com