சனாதன சர்ச்சை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சனாதன சர்ச்சை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

சென்னையை சேர்ந்த வக்கீல் பி.ஜெகநாத் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- சென்னையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்து மதம், சனாதன தர்மத்தை குறி வைத்து, தகாத முறையில் பேசி, அவமானப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு உள்ளது.

சனாதனத்தை டெங்கு மலேரியாவை போல ஒழிக்க வேண்டுமென தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்தின் 25,26 பிரிவுகள் மீறப்பட்டது, முரணானது என அறிவிக்க வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு தமிழீழ விடுதலை புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்பு நிதி வழங்கியதா என்பதை சி.பி.ஐ. விசாரிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், சி.பி.ஐ.க்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரினார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் ஒருவர் வெறுப்பு பேச்சை ஊக்குவிக்கிறார்; அவர் அரசின் பிரதிநிதி, தனிநபர் அல்ல என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. சனாதன சர்ச்சை விவகாரத்தில், தலையிட விரும்பவில்லை என்றும் இதில் உயர்நீதிமன்றத்தை ஏன் நாடக்கூடாது என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினர்.

அதனை தொடர்ந்து சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது பற்றி தமிழக அரசு பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com