

டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் ரெயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இனி சமஸ்கிருத மொழி பயன்படுத்தப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தற்போது அங்குள்ள ரெயில் நிலைய பெயர் பலகைகளில் இந்தி, ஆங்கிலம் மற்றும் உருது மொழி இடம்பெற்றுள்ளது. இனி இந்தி, ஆங்கிலத்துடன் உருது மொழிக்கு பதிலாக சமஸ்கிருத மொழியில் ஊர்களின் பெயர் எழுதப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ரெயில்வே பதிவேட்டில் உள்ள விதிகளின்படி, ரெயில் நிலையங்களின் பெயர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்த குறிப்பிட்ட மாநிலத்தின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியில் இருக்க வேண்டும்.
2010-ம் ஆண்டு, உத்தரகாண்ட் அரசு அந்த மாநிலத்தின் இரண்டாம் மொழி அந்தஸ்தை சமஸ்கிருதத்திற்கு அளித்து அதிகாரப்பூர்வ ஆணையை வெளியிட்டது. அதன் அடிப்படையிலேயே தற்போது இந்த மாற்றம் செய்யப்படுகிறது. தற்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், உத்தரகாண்ட் மாநில முதல்மந்திரியாக இருந்தபோது சமஸ்கிருதம் அலுவல் மொழியாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.