பஞ்சாபின் புதிய முதல்- மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்பு

பஞ்சாபின் புதிய முதல்- மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்கிறார்.
பஞ்சாபின் புதிய முதல்- மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்பு
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு, முதல்-மந்திரியுடன் ஏற்பட்ட மோதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மந்திரிசபையில் இருந்து விலகினார். அதில் இருந்து அவருக்கும், அமரிந்தர் சிங்குக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. அது மோதலாகவும் மாறி இருவரும் ஒருவரையொருவர் விமர்சிக்கும் போக்கு நிலவியது.

இந்தநிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்கள், அமரிந்தர் சிங்குக்கு எதிராக மாறின. இதில் மன உளைச்சலுக்கு ஆளான அமரிந்தர் சிங், மாநிலத்தில் தனக்கு எதிராக நடந்து வருகிற சமீபத்திய நிகழ்வுகளை வேதனையுடன் விவரித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து அவர் அதிரடியாக பதவி விலகினார். மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

அதைத் தொடர்ந்து முதல்-மந்திரி பதவிக்கு சித்து, சுனில் ஜாக்கர், திரிப்த் ராஜிந்தர்சிங் பஜ்வா, சுக்ஜிந்தர் சிங் ரந்தவா என பலரது பெயர்கள் அடிபட்டன. நேற்று தொடர்ந்து 2-வது நாளாக காலை 11 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கவிருந்தது. ஆனால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டதால், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மாலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக (முதல்-மந்திரியாக) சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி (வயது58) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அமரிந்தர் சிங் மந்திரிசபையில் தொழில்கல்வித்துறை மந்திரியாக பதவி வகித்த தலித் தலைவர் ஆவார். இவர் பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் இன முதல்-மந்திரி என்ற சிறப்பை பெறுகிறார்.

முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி, கவர்னர் மாளிகைக்கு காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் அஜய் மக்கான், ஹரிஷ்ராவத், ஹரிஷ் சவுத்ரி ஆகியோருடன் விரைந்தார். அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரை புதிய அரசு அமைக்குமாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.

அதன்படி, இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறுகிற எளிய நிகழ்ச்சியில் புதிய முதல்-மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com