சேலை கட்டி மோசடி... கர்நாடகாவில் 100 நாள் வேலை திட்டத்தில் அவலம்

கோப்புப்படம்
உண்மையில் வேலை அவசர தேவையாக உள்ள பெண் பணியாளர்களும் இதனால் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்நிலையில், கர்நாடகாவின் யாதகீர் மாவட்டத்தில் சேலை கட்டி, பெண்கள் போன்று உடையணிந்து இந்த திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டு, ரூ.3 லட்சம் வரை ஆண்கள் பலன்களை பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
அவர்கள் அதுபற்றிய மோசடியான புகைப்படங்களை தேசிய மொபைல் கண்காணிப்பு சேவையில் பதிவேற்றம் செய்து, பெண்களும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் என பொய்யாக காட்டியிருக்கின்றனர். நடப்பு ஆண்டின் பிப்ரவரியில் இந்த மோசடி நடந்துள்ளது.
இதனால், அரசுக்கு நிதியிழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுதவிர, வேலை அவசர தேவையாக உள்ள உண்மையான பெண் பணியாளர்களும் இதனால் ஏமாற்றப்பட்டு உள்ளனர். இதுபற்றி மல்ஹார் கிராமத்தின் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சென்னபசவா கூறும்போது, இந்த விவகாரத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை.
வேறொரு ஊழியர் இதனை செய்துள்ளார். இந்த ஊழல் பற்றி எனக்கு தெரியாது. என்னுடைய கவனத்திற்கு வந்ததும், அந்த நபரை சஸ்பெண்டு செய்து விட்டேன். தடையின்றி வேலை நடந்து வருகிறது. 2,500 தொழிலாளர்களுக்கு நாங்கள் வேலை அளித்து இருக்கிறோம் என கூறியுள்ளார்.






