சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் நாட்டை விட்டு வெளியேற தடை விமான நிலையங்களுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ்

சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் கொல்கத்தா நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் நாட்டை விட்டு வெளியேற தடை விமான நிலையங்களுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

மேற்கு வங்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனங்கள் ரூ.2,500 கோடி அளவுக்கு மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடியை கொல்கத்தா நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்தது.

பின்னர் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில் இந்த மோசடியை விசாரித்த அதிகாரிகள், இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த விரும்பினர். இதற்காக கடந்த ஜனவரி மாதம் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றபோது, மாநில போலீசாருக்கும், சி.பி.ஐ.க்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு சி.பி.ஐ. எடுத்து சென்றது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ராஜீவ் குமாரை கைது செய்ய தடை விதித்தது. எனினும் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் கடந்த பிப்ரவரி மாதம் ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது பல்வேறு தகவல்களை அவர் மறைத்ததாகவும், அதிகாரிகளிடம் திமிரான முறையில் நடந்து கொண்டதாகவும் சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூறப்பட்டது. எனவே அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு சி.பி.ஐ. கோர்ட்டில் முறையிட்டது.

சாரதா மோசடி வழக்கில் குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப் போன்ற கருவிகளை ராஜீவ் குமார் திரும்ப ஒப்படைத்ததன் மூலம் அதில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு விதித்து இருந்த தடையை கடந்த 17-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது. எனினும் அவர் கீழ் கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதால் கொல்கத்தா ஐகோர்ட்டில் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நோட்டீஸ் அனுப்பியது

சாரதா மோசடி வழக்கில் அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வரும் சி.பி.ஐ., அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ராஜீவ் குமாருக்கு எதிராக கவன ஈர்ப்பு நோட்டீஸ் ஒன்றை அனைத்து விமான நிலையங்களுக்கும், குடியுரிமை அதிகாரிகளுக்கும் சி.பி.ஐ. அனுப்பி உள்ளது.

அதில், ராஜீவ் குமார் நாட்டை விட்டு வெளியேறுவது தெரியவந்தால் உடனடியாக சி.பி.ஐ.க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனக்கூறி அவர்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே ராஜீவ்குமார் இன்று (திங்கட்கிழமை) கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆக வேண்டும் என்று சம்மனை நேற்று அவரது வீட்டில் போலீசார் அளித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com