3 ஆண்டுகள் ஆகியும் சசிகலா ரூ.10 கோடி அபராதம் செலுத்தவில்லை: கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க நேரிடும்

ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்தாவிட்டால், சசிகலா கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
3 ஆண்டுகள் ஆகியும் சசிகலா ரூ.10 கோடி அபராதம் செலுத்தவில்லை: கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க நேரிடும்
Published on

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனை காலம் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனால் 3 பேரும் இன்னும் அபராத தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் அவர்கள் இன்னும் அபராத தொகையை செலுத்தவில்லை.

தண்டனை காலம் முடியும் முன்பு அபராத தொகையை செலுத்தாவிட்டால் 3 பேரும் கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட பெரிய வழக்குகளில் அபராதம் விதிக்கப்படுபவர்கள் தண்டனையின் கடைசி வருடத்தில்தான் அபராத தொகையை செலுத்துவார்கள். சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவதில் 2 சிக்கல்கள் உள்ளன. அபராத தொகை அவர் சம்பாதித்த பணத்தில் இருந்து தான் செலுத்த வேண்டும். அவர் சிறையில் வேலைபார்த்து சம்பளம் வாங்கி இருந்தால் அந்த பணத்தை கழித்து மீதி பணத்தை செலுத்தினால் போதும்.

அவர் செலுத்தும் அபராத தொகைக்கு வருமான வரித்துறையில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அபராத தொகையை சசிகலா காசோலை அல்லது வரைவோலை மூலமாக செலுத்த வேண்டும். சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கையில் ஈடுபட்டதாக அவர் மீது ஊழல் தடுப்பு பிரிவில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கில் விசாரணை முடிந்து குற்றவாளி என தீர்ப்பு வந்தால், அவருக்கு அந்த வழக்கில் கூடுதல் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி உள்ளதால் சசிகலா நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து முன்கூட்டியே வெளிவர வாய்ப்பு இல்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com