

புதுடெல்லி,
2 நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.
சுமார் மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசாங்கத்தின் நிதியுதவியை கேட்டு கோரிக்கை மனுவை அளித்தார்.
பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் கட்டப்பட்டு வரும் அ.தி.மு.க. அலுவலக கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசியுள்ளேன். நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினேன். தமிழகத்தில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ள பணிகளை திறந்துவைக்க வேண்டும் என்றும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திரமோடிக்கு கோரிக்கை வைத்தேன், அவர்களும் ஏற்றுக்கொண்டு வருவதாகத் தெரிவித்திருக்கின்றார்.
கல்லணை புனரமைப்பு திட்டம், பவானி நவீனப்படுத்தும் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்ட வருமாறும், சென்னை, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்தை தொடங்கிவைக்க வேண்டும் என்றும் பிரதமரிடத்தில் கோரிக்கை வைத்திருக்கின்றேன், அவரும் இசைவளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தபோது என்ன கோரிக்கைகளை வைத்தீர்கள்?
பதில்:- நிவர் மற்றும் புரெவி புயல்கள், தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அரசியல் பேசவில்லை.
கேள்வி:- மத்திய பட்ஜெட்டுக்கு 10 நாட்கள் தான் இருக்கிறது. இந்த தேர்தல் நேரத்தில் தமிழகத்திற்கு தேவையான கூடுதல் நிதி...
பதில்:- அதைத்தான் நான் கேட்டிருக்கிறேன். காவிரி-குண்டாறு திட்டம், நடந்தாய் வாழி காவிரி போன்ற முக்கியமான திட்டங்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அடிக்கல் நாட்டிய மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-ஐ ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றவிருக்கிறோம். அதற்கு மாநில அரசு 50 சதவீதம், மத்திய அரசு 50 சதவீதம் நிதி அளிக்கும்.
கேள்வி:- 2 முக்கிய தலைவர்களை சந்தித்தீர்கள், ஒன்று பிரதமரிடம் தமிழகத்தின் நல திட்டங்கள் குறித்து பேசியுள்ளீர்கள், 2-வது அமித்ஷாவை அரசியல் ரீதியாக ...
பதில்:- அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. நான் வந்தது, தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காகத் தான். தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மத்திய உள்துறை மந்திரியையும், பிரதமரையும் சந்தித்தேன். அரசியல் எதுவும் பேசவில்லை, பேசுவதற்கு தகுந்த நேரமும் இல்லை. ஏனென்றால் தேர்தல் வருவதற்கு காலம் உள்ளது.
கேள்வி:- தி.மு.க.வுக்கு சாதகமாக தேர்தல் கருத்து கணிப்பு உள்ளதாக....
பதில்:- அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் அவர்களுக்கு வேண்டிய கருத்தைத்தான் சொல்வார்கள். எங்களுடைய கருத்துக்கணிப்பு, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. அரசு 3-வது முறை தொடர்ந்து ஆட்சி அமைக்கும்.
கேள்வி:- பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று சொல்கிறார்களே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன? தாமரை மலர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?
பதில்:- நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். ஒவ்வொரு கட்சியும் அந்த கட்சி வளர வேண்டும் என்று தான் நினைப்பார்கள், அடுத்த கட்சி வளர வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். தேர்தல் வரும்வரை எல்லா கட்சியினுடைய தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஊக்கப்படுத்துவது ஒவ்வொரு கட்சியின் தலைவருடைய நோக்கம்.
அதில் மற்றவர்கள் யாரும் நுழைய முடியாது. நான் கட்சி வைத்திருந்தால், என் கட்சி வரவேண்டும் என்றுதான் நினைப்பேன். அகில இந்தியக் கட்சி அப்படித்தான் பேசுவார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்தக் கொள்கையின்பட தான் அவர்கள் பேசுவார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எல்லா கட்சிகளும் தாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பது தவறல்ல. அதற்குத்தான் கட்சியை துவங்கி, நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி:- பா.ஜ.க எத்தனை தொகுதி கேட்கின்றார்கள்?
பதில்:- தேர்தல் அறிவிப்பிற்கு பிறகுதான் இவையெல்லாம் முடிவு செய்யப்படும்.
கேள்வி:- முதல்-அமைச்சர் வேட்பாளர் யாராக இருக்கும் என்று...
பதில்:- நான் இதுகுறித்து ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது.
கேள்வி:- சசிகலா வெளியில் வந்தால், அ.தி.மு.க.வுடன் இணைவதற்கு வாய்ப்பிருக்கிறதா?
பதில்:- வாய்ப்பே கிடையாது. அவர்கள் அ.தி.மு.க. கட்சியிலேயே கிடையாது.
கேள்வி:- பா.ஜ.க., அவரை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்று...
பதில்:- யார் சொன்னது? அதைச் சொல்லுங்கள் முதலில். நாங்கள் சந்தித்தது தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றுதான் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். 100 சதவீதம் இதுதான் பேசினோம்.
கேள்வி:- சசிகலா அ.தி.மு.க.வில் சேர மாட்டாரா, அவரை ஏற்றுக்கொள்வீர்களா... பதில்:- 100 சதவீதம் கிடையாது. அ.தி.மு.க.வில் தெளிவாக முடிவு எடுக்கப்பட்டு, இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. கட்சிக்கு பல பேர் அங்கிருந்து வந்துவிட்டார்கள், அவர் ஒருவர் தான் இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் பார்க்கின்றபோது பெரும்பாலானவர்கள் அங்கிருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்கள். சிலர் அவருடன் இருக்கிறார்கள்.
கேள்வி:- அவர் மட்டும் இருக்கிறார் என்கிறீர்கள், அவர் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்:- அவரையே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்லாண்டு காலம் நீக்கி வைத்தார். ஜெயலலிதா இறந்த பிறகுதானே அவருக்கு பதவி கொடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதா இருக்கும்போது, அவர் கட்சியிலேயே கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.