

பெங்களூரு,
சொத்துகுவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளிகள் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சசிகலா உட்பட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ. 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அவருடைய உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு 21 நாட்கள் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டார் எனவே அவர் மீதம் இருக்கும் 3 வருடம் மற்றும் 11 மாத காலம் சிறையில் இருக்கவேண்டும்.
சசிகலா ரூ. 10 கோடி அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் கூடுதலாக 13 மாதங்கள் சிறையில் இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறை அதிகாரி கிருஷ்ண குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சசிகலா சுப்ரீம் கோர்ட்டு விதித்த அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் கூடுதலாக 13 மாதங்கள் சிறையில் இருக்கவேண்டும், என்றார். சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் சிறையில் பிற கைதிகளை போன்றுதான் நடத்தப்படுகின்றனர், அவர்களுக்கு என்று சிறப்பு சலுகைகள் எதுவும் கிடையாது என்றும் தெரிவித்து உள்ளார்.
பாதுகாப்பு காரணமாக சசிகலா மற்றும் இளவரசி பெண்கள் பகுதி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர், சிறு அறையில் உள்ளனர். சுதாகரன் ஆண்களுக்கான பகுதியில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர்களுக்கு சிறை உணவுதான் வழங்கப்படுகிறது, சிறை மருத்துவர்கள் அவர்களை அவ்வபோது பரிசோதனை செய்து மருந்து வழங்குகிறார். அவர்களும் மற்ற சிறை கைதிகள் தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்கப்பட்டு உள்ள இடத்திலே பார்த்து வருகிறார்கள் என தெரிவித்து உள்ளார்.