சசிகலா ஜனவரி 27-ந் தேதிக்கு முன் விடுதலை இல்லை - பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்

சசிகலா ஜனவரி மாதம் 27-ந் தேதிக்கு முன்கூட்டியே விடுதலை இல்லை என பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.
சசிகலா ஜனவரி 27-ந் தேதிக்கு முன் விடுதலை இல்லை - பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்
Published on

பெங்களூரு :

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது.

கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். எனவே சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்து இருந்தார். அந்த மனு, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்ட ஆலோசனையை சிறைத்துறை கேட்டுள்ளது. இந்த நிலையில் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா குறித்து கேட்ட சில கேள்விகளுக்கு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.

அதில் சசிகலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்திவிட்டதாக அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் தண்டனை கைதி, 9 ஆண்டுகள் சிறையில் கழித்த நிலையில் 60 வயதை அடைந்திருந்தால் அவர்களுக்கு தண்டனையில் சலுகை வழங்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது. இதன்படி பார்த்தால் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு விடுமுறை சலுகை கிடைக்காது என்று சிறை நிர்வாகம் சூசகமாக தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முன்பு 35 நாட்கள் சிறையில் இருந்தார். இந்த நாட்கள் அவரது தண்டனை காலத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர் 2 முறை 17 நாட்கள் பரோலில் வீட்டுக்கு சென்றார். இந்த 17 நாட்களும் தண்டனை காலத்தில் சேர்க்கப்படும். அதன்படி பார்த்தால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் ஏற்கனவே கூறியபடி வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி தான் சசிகலா விடுதலை ஆவார் என்பது உறுதி என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com