சசிகலா வருகை அ.தி.மு.க.வில் தாக்கத்தை ஏற்படுத்தும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

சசிகலா வருகை அ.தி.மு.க.வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன்
Published on

போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று நாகர்கோவில் வந்தார். அவர் பார்வதிபுரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் வீறுகொண்ட போராட்டமாக நடந்து கொண்டிருக்கிறது. மூன்று சட்டங்களையும் மோடி அரசு வாபஸ் பெற மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகள் தினம், தினம் அந்த போராட்டக் களத்திலேயே மரணம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுவரை 210-க்கும் மேற்பட்டோர் தற்கொலையிலும், நோய்நொடியாலும் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாயிகளுடன் கலந்து பேசி அடுத்தகட்ட வலுவான போராட்டத்தை நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முயற்சிகள் எடுத்து கொண்டிருக்கிறோம்.

கடன்கள் ரத்து

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கவர்னர் இந்த பிரச்சினையை 2 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது அவர்களை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்றும், ஜனாதிபதிக்குத்தான் அதிகாரம் உண்டு என்றும் கூறியுள்ளார். இந்த பிரச்சினையில் 7 பேரையும் விடுதலை செய்கிறோம் என்று மாநில அரசு அறிவித்து விடுதலை செய்ய வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதாக கூறி உள்ளார். முறையாக கணக்கெடுக்காமல் விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்துவிட்டு, இப்போதுதான் கணக்கெடுக்க தொடங்கியிருக்கிறார்கள். இது என்ன நியாயம்? கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கும் விவசாயிகள் நான்கில் ஒரு பங்கினர் மட்டும் தான். மற்ற விவசாயிகள் தேசியமயமாக்கப்பட வங்கிகளிலும், தனியார் வட்டிக்கடைகளிலும் கடன் வாங்குகிறார்கள். எனவே அந்த விவசாயிகள் வாங்கியுள்ள பயிர் கடன்கள், விவசாய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.

லஞ்சம்-ஊழல்

தமிழ்நாடு முழுவதும் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது அதை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் - ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது, தலைவிரித்தாடுகிறது. முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் உள்ளது.

சசிகலா வருகை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரையில் வருகிற சட்டசபை தேர்தலில் நாங்கள் எடுத்த தீர்மானத்தின்படி அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியை முறியடிப்போம். தி.மு.க. உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளுடன் இணைந்து 234 தொகுதிகளில் வெற்றிபெறுவதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவோம். வருகிற 20-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் எங்களது கட்சியின் அகில இந்திய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். 28-ந் தேதி நாகர்கோவிலில் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் பேச உள்ளார். பிரகாஷ் காரத், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளனர்.

சசிகலா வருகையால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது. அ.தி.மு.க.வில் வேண்டுமானால் கலவரம், கலாட்டா ஏற்படுமே தவிர தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அவருடைய வருகை அ.தி.மு.க.வில் தாக்கத்தை ஏற்படுத்தும். சசிகலா வருகையால் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் தான் பதற்றத்தில் உள்ளனர். தற்போது கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அமைச்சர்களுக்கு கூட பாதுகாப்பு போட வேண்டிய நிலை உருவாகும்.

தி.மு.க. கூட்டணி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய அறிவிப்புகள் தேர்தலில் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எண்ணித்தான் அறிவிப்புகளை செய்கிறார்கள். எந்த அறிவிப்புகளை முதல்-அமைச்சர் வெளியிட்டாலும் வருகிற சட்டசபை தேர்தலில் மக்கள் அ.தி.மு.க. அரசுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறவே முடியாது. இவர்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணியில் புதிதாக கட்சிகளை இணைக்க வேண்டிய அவசியமும், வாய்ப்பும் இல்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலும் எங்களது கட்சி சார்பில் போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, நிர்வாகிகள் நூர் முகமது, முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கட்சி அலுவலகத்தில் குமரி மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com