சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை கேரளாவுக்கு மாற்றக் கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை கேரளாவுக்கு மாற்றக் கோரிய வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி செல்வராணி தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை கேரளாவுக்கு மாற்றக் கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

சாத்தன்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்றக் கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், இந்த வழக்கில் 9 போலீஸ்காரர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அதிக அளவில் கவனம் பெற்றுள்ளது. இதுவே பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கண்காணித்து வருகிறது. குற்றச்சாட்டுகள் பதிவுநிலையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது தாக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற கவலை உள்ளதால், இதை கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இது தொடர்பான மனுவை கடந்த பிப்ரவரி 15-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரிஷிகேஷி ராய், சி.பி.ஐ. மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏனைய 8 பேரும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையே, வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்றக்கூடாது என தெரிவித்து இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா நேற்று விசாரித்தார். அப்போது செல்வராணி சார்பில் மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங், வக்கீல் கே.பாரிவேந்தன் ஆஜராகி, வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்றக் கோரி ரகு கணேஷ் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.

ரகு கணேஷ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அஞ்சனா பிரகாஷ், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ததற்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய விசாரணை கோர்ட்டு போதிய அவகாசம் அளிக்கவில்லை என வாதிட்டார்.

அந்த வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்ததுடன், எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரிய செல்வராணியின் மனுவை ஏற்று, அவரது மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்து வாரத்துக்குத் தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com