சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பலாத்கார வழக்கின் கைதி; சிறை வட்டாரம் தகவல்

டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பலாத்கார வழக்கின் கைதி என சிறை வட்டாரம் தெரிவித்து உள்ளது.
சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பலாத்கார வழக்கின் கைதி; சிறை வட்டாரம் தகவல்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் மந்திரியான சத்யேந்தர் ஜெயின் மீது பணமோசடி வழக்கு பதிவானது. தொடர்ந்து, கடந்த மே மாதம் 30-ந்தேதி அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்தது.

இதனால், அவர் வகித்து வந்த சுகாதாரம், உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட இலாகாக்கள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும், டெல்லி அமைச்சரவையில் எந்த பொறுப்பும் இன்றி மந்திரியாக ஜெயின் நீடித்து வருகிறார்.

இந்த நிலையில், சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது என அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் புகார் அளித்தது. சிறையில் தலை மசாஜ், கால் மசாஜ், முதுகு மசாஜ் என அனைத்து வசதிகளும் ஜெயினுக்கு அளிக்கப்படுகிறது.

சத்யேந்திர ஜெயின் ஒரு மந்திரி என்றும், அதனை அவர் நியாயமற்ற முறையில் பயன்படுத்தி கொள்கிறார் என கூறியது. தவிர, டெல்லி மந்திரி சிறை அறையின் அனைத்து சி.சி.டி.வி. காட்சிகளையும் அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது.

இந்த நிலையில், சிறையில் ஜெயின் மசாஜ் செய்து கொள்ளும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளிவந்தன. சிறையில் அவருக்கு வி.ஐ.பி. சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவரை திகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என, பா.ஜ.க. கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த வீடியோ வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது.

டெல்லி அரசின் கீழ் வரும் டெல்லி சிறையில், ஜெயின் படுக்கையில் படுத்தபடி, காகிதங்களை திருப்பி, வாசித்தபடி காணப்படுகிறார். அவரருகே உள்ள நபர், ஜெயின் காலுக்கு மசாஜ் செய்கிறார். கடந்த 17-ந்தேதி ரோஸ் அவென்யூ கோர்ட்டு, ஜெயினின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில், முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில், ஜெயினுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது என மணீஷ் சிசோடியா கூறியதுடன், சிறையில் அவருக்கு சகல வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இதற்கு இந்திய பிசியோதெரபிஸ்ட் கூட்டமைப்பு சார்பில் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது அறிக்கை வெளியிடப்பட்டது. டெல்லி மந்திரி மணீஷ் சிசோடியா பிசியோதெரபியை, மற்றொரு மந்திரிக்கு மசாஜ் செய்ததுடன் ஒப்பிட்டு அதனை தரக்குறைவாக பேசியுள்ளார் என குற்றச்சாட்டு எழுப்பியது.

எங்களுடைய உன்னதம் வாய்ந்த தொழிலை பற்றிய அவர்களது கல்வி தரம் மற்றும் அறிவை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர் என்றும் தெரிவித்தது. சிறையில் நடந்து வரும் செயல் பிசியோதெரபி அல்ல என நாங்கள் கூற முடியும்.

அது பிசியோதெரபியை இழிவுப்படுத்தும் ஒரு வழியாகும். இந்த செயலுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றோம். இதற்காக அந்த மந்திரி அல்லது வேறு யாராக இருப்பினும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று திகார் சிறையின் முன்னாள் பி.ஆர்.ஓ. சுனில் குப்தா கூறும்போது, சிறையில் உள்ள பிற கைதிகள் மந்திரிக்கு மசாஜ் செய்கின்றனர் என்பது அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது என்று தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பிசியோதெரபிஸ்ட் அல்ல என்றும் அவர் பலாத்கார வழக்கு ஒன்றில் கைதியாக சிறையில் உள்ளவர் என்றும் திகார் சிறை வட்டாரம் தெரிவித்து உள்ளது.

ஜே.பி. கல்யாண் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் சிறை கைதியாக அந்த நபர் உள்ளார் என்றும் தெரிவித்து உள்ளது.

எனினும், இது சத்யேந்தர் ஜெயின் பற்றிய விவகாரம் அல்ல. டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை சந்திக்க போகிறது. அந்த வருத்தத்தில் தொடர்ந்து ஆம் ஆத்மி மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது என ஆம் ஆத்மி மந்திரி கோபால் ராய் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com