

புதுடெல்லி,
இந்தியாவில் இருந்து மெக்கா நகருக்கு ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இந்தியாவில் இருந்து கடல் வழியாக கப்பலில் செல்வது ஹஜ் பயண செலவை குறைக்க உதவியாக இருக்கும்.
எனவே இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்கு கடல் வழியே ஹஜ் பயணம் மேற்கொள்வது என இந்தியா திட்டம் வகுத்தது. சவூதி அரேபியா இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுபற்றிய ஒப்பந்தம் இந்தியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மெக்கா நகரில் கையெழுத்திடப்பட்டது.
இதனை தொடர்ந்து மத்திய சிறுபான்மை விவகார துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இது ஒரு புரட்சிகர, ஏழைகளுக்கு ஆதரவான, புனித யாத்திரையாளர்கள் பயன்பெறும் வகையிலான முடிவு என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மும்பை நகரில் இருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு கடல்வழி ஹஜ் பயணம் மேற்கொள்வது முன்பே இருந்துள்ளது. இது கடந்த 1995ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.
இரு நாடுகளின் அதிகாரிகளும் அனைத்து நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்பமுறைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்வர். வருகிற வருடங்களில் கடல்வழி ஹஜ் பயணம் மேற்கொள்வது மீண்டும் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து முஸ்லிம் பெண்கள் முதன்முறையாக மெஹ்ரம் (ஆண் துணை) இன்றி ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் இவர்களுக்காக தனியாக தங்கும் வசதி மற்றும் போக்குவரத்து ஆகியவை ஒழுங்குப்படுத்தப்பட்டு உள்ளன. முஸ்லிம் பெண்களின் உதவிக்காக பெண் ஹஜ் உதவியாளரும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என நக்வி தெரிவித்துள்ளார்.