குஜராத்தில் 'சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம்' தொடங்கியது

குஜராத்தில் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குஜராத்தில் 'சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம்' தொடங்கியது
Published on

சோம்நாத்,

தமிழகத்துக்கும், உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் மத்திய அரசு காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்துக்கும், குஜராத்துக்கும் இடையேயான தொடர்புகளை கொண்டாடும் வகையில் 'சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்துகிறது.

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் 18-ந்தேதி (நேற்று) முதல் வருகிற 30-ந்தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், சவுராஷ்டிரா-தமிழ் சங்கமத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினர் குஜராத் சென்றனர்.

இவர்களுக்காக மதுரையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கலாசார பாதுகாப்பு

இந்த நிலையில் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நேற்று குஜராத்தில் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசும்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகியவை போன்று நமது கலாசார பாதுகாப்பும் முக்கியம் வாய்ந்தது ஆகும்.

வாசுதேவ குடும்பம்

ஒரு தேசத்தின் அடையாளத்தை அப்படியே வைத்திருக்க எல்லைகள் மற்றும் பிற விஷயங்களின் பாதுகாப்பு எப்படி தேவைப்படுகிறதோ, அதைப்போல தேசத்தின் அடையாளத்தைத் தக்கவைக்க அதன் கலாசார பாதுகாப்பும் சமமாக அவசியம்.

இந்தியாவின் கலாசார பாரம்பரியம் மிகவும் வலுவானது. "வலிமையான புயல்" கூட அதை அசைக்க முடியாது.

முஸ்லிம்கள், யூதர்கள், பார்சிகள் என பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டில் வாழ்வதற்கு மட்டுமின்றி, அதன் ஒருங்கிணைந்த பகுதியாகவும் மாற வாய்ப்பு கிடைத்தது என்பது இந்தியாவுக்குப் பெருமை. வாசுதேவ குடும்பம் என்ற செய்தியுடன் இந்தியாவின் கலாசார பாரம்பரியம் இந்த ஒருங்கிணைப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

கல்வி சேவை

விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் மதுரை, பரமக்குடி, பாளையங்கோட்டை, திண்டுக்கல், சேலம், தஞ்சை, கும்பகோணம், திருபுவனம் மற்றும் தேனி போன்ற ஊர்களில் சவுராஷ்டிரர்கள் கல்வி நிறுவனங்களை உருவாக்கி கல்வி சேவை செய்து வருகிறார்கள். இதனால் சமூகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை பெருகி என்ஜினீயர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் என வளர்ந்துள்ள நிலையில் அவர்களது பொருளாதாரமும் வளர தொடங்கி உள்ளது.

தாய்மொழி சவுராஷ்ட்ரீயாக இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு ஒன்றிய வாழ்க்கையில் இருப்பதால் தமிழ் மொழியையும் தங்களது மொழியாகவே பாவித்து தமிழ் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றனர் என்றி அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com