

சென்னை,
நாடு முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ (SBI) வங்கி ஊழியர்கள் மே 25, 26 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஊழியர்களை தற்காலிகமாக அன்றி நிரந்தரமாக பணியமர்த்துதல், தேசிய ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கான ஓய்வூதிய நிதி மேலாளர் தேர்வில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து எஸ்பிஐ வங்கி தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
* அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சம்மேளனம் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அனைத்து வங்கிகளின் கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்க நாங்கள் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
* அதே வேளையில், வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தேவைகளுக்கு ஏடிஎம்கள், தானியங்கி டெபாசிட் இயந்திரங்களையும் பயன்படுத்த வேண்டும்.
* வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை அணுக வேண்டும்.
* இணைய வங்கி சேவை, யோனோ(YONO), மொபைல் வங்கி சேவை, யுபிஐ மற்றும் பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மே மாதம் 23ம் தேதி சணிக்கிழமை. மாதத்தின் 4வது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் இயங்காது. மறுநாள் மே 25 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும்.
மே 25 மற்றும் 26 தேதிகள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த இரு நாட்களும் வங்கிப்பணிகள் இருக்காது. மே 27 புதன்கிழமை பக்ரீத் விடுமுறை என்பதால் அன்றும் வங்கிச்சேவைகள் இருக்காது. ஒட்டு மொத்தமாக, மே 23 முதல் மே 27 வரை 5 நாட்கள் வங்கிகள் இயங்காது என்பதால் எஸ்.பி.ஐ வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.