தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து கடந்த மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை மார்ச் 6-ந் தேதிக்குள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாரத ஸ்டேட் வங்கி கேட்ட கூடுதல் அவகாசமும் மறுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன் தினம், தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்களை பெற்றவர்களின் விவரங்களை அளித்தது. இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று பொதுவெளியில் பகிர்ந்தது.

தேதி வாரியாக எந்தெந்த நிறுவனங்கள் தனிநபர்கள் பத்திரங்களை வாங்கினார்கள் எந்தெந்த தேதியில் பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் ரொக்கமாக மாற்றினார்கள் என்ற விவரங்கள் மட்டுமே நேற்று பட்டியலில் இடம் பெற்றது. மற்றபடி தேர்தல் பத்திர எண், யார் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கினார்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு கூறுகையில், "அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து விவரங்களையும் எஸ்.பி.ஐ. வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை. தேர்தல் பத்திரத்தின் எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு அவர் நிதி வழங்கியுள்ளார், எவ்வளவு பணம், டெனாமினேசன், ஆகியவற்றை வழங்க வேண்டும்.

திங்கட்கிழமைக்குள் வழங்க வேண்டும். மேலும், பேப்பர் வடிவில் இருக்கும் அனைத்து தகவல்களையும் டிஜிட்டலாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. மேலும், திங்கிட்கிழமை இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.   

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com