மத்திய அரசு பணி பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி.க்கு இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
மத்திய அரசு பணி பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி.க்கு இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மட்டும் இடஒதுக்கீடு வழங்க 1992-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு 9 நீதிபதிகள் அமர்வு அனுமதி அளித்தது. ஆனால், 5 ஆண்டுகள் கடந்த பிறகும், இடஒதுக்கீடு வழங்க 1997-ம் ஆண்டு மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் உத்தரவை கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இந்த தடையை நீக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மனிந்தர் சிங், அரசுப்பணி பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு வழங்க விரும்புகிறது என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், இப்போது எப்படி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று கேட்டனர்.

அதற்கு மனிந்தர் சிங், பல்வேறு ஐகோர்ட்டுகளும், சுப்ரீம் கோர்ட்டும் மாறி, மாறி பிறப்பித்த உத்தரவுகளால், பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் ஸ்தம்பித்துப் போயுள்ளது என்றனர்.

அதைக்கேட்ட நீதிபதிகள், சட்டத்துக்கு உட்பட்டு, பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு தடை ஏதும் இல்லை. அரசியல் சட்ட அமர்வு இறுதி உத்தரவு பிறப்பிக்கும்வரை, இடஒதுக்கீடு வழங்கலாம். ஆனால், எந்த சட்டப்படி வழங்க வேண்டும் என்பதை நாங்கள் கூற மாட்டோம் என்று கூறினர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த அனுமதிக்கு மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

இந்த உத்தரவுக்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு, மூடப்பட்ட கதவு மீண்டும் திறந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்திய பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com