கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. #KartiChidambaram
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி
Published on

புதுடெல்லி,

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பண ஆதாயம் பெற்றதாக முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் பொருளாதார அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்து உள்ளது.

இவ்வழக்குகளில் தன்னை கைது செய்யாமல் இருக்க கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் கோரி இருந்தார். இதன் அடிப்படையில் ஜூலை பத்தாம் தேதிவரை அவரை கைது செய்ய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சொந்த அலுவல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மே மாதம் 19-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு கார்த்தி சிதம்பரம் செல்ல நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

பயணம் செய்யும் விமானம், இந்தியாவுக்கு திரும்பும் தேதி ஆகியவற்றை விசாரணை முகமையிடம் தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கவோ, செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை முடிக்கவோ கூடாது. மேலும், வெளிநாடுகளில் சொத்து தொடர்பான எவ்வித பரிவர்த்தனைகளிலும் ஈடுபட கூடாது.

இந்த பயணத்தை இதர நீதிமன்றங்களில் தடை உத்தரவு மற்றும் ஜாமீன் வாங்க பயன்படுத்த கூடாது. பயணம் முடிந்து தாய்நாடு திரும்பியதும் பாஸ்போர்ட்டை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com