பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஜாமீன்

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள சாமியார் ஆசாராம் பாபுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஜாமீன்
Published on

புதுடெல்லி,

தனது ஆசிரமத்தில் இளம் பெண் ஒருவரை ஆசாரம் பாபு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர், ஜோத்பூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். குஜராத்தில் உள்ள காந்திநகர் செஷன்ஸ் நீதிமன்றம் ஜனவரி 2023ல் மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் 86 வயதாகும் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்நிலையில், தனது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வேகமாக மோசமடைந்து வருவதாகவும் கூறி சுப்ரீம் கோர்ட்டில் ஆசாரம் பாபு ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தார். இந்தநிலையில் இது தொடர்பான அவரது மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எம்.எம். சுந்திரேஷ் மற்றும் நீதிபதி ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆசாராம் பாபு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், ஆசாராம் பாபுவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உயிர் பிழைத்தவரின் சாட்சியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும், இந்த வழக்கில் பல முரண்பாடுகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பது அவசியம் என்று வாதிட்டார்.

குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆசாராம் பாபுவின் மனுவை எதிர்த்தார். சிறையில் அவருக்கு போதுமான மருத்துவ வசதிகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எம்.எம். சுந்திரேஷ் மற்றும் நீதிபதி ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. அதேநேரத்தில், மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே ஜாமீன் வழங்குவதாக தெளிவுபடுத்தியது.

மார்ச் 31 வரை இடைக்கால ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, ஆசாராம் பாபு தனது சீடர்களை சந்திக்கவும் தடை விதித்துள்ளது. மேலும், ஜாமீன் கால அவகாசம் முடிவடைவதற்கு முன் ஆசாராம் பாபுவின் உடல்நிலையை மறுமதிப்பீடு செய்யலாம் என்று கோர்ட்டு கூறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com