பசுவை கடத்தியதாக இளைஞர் அடித்துக் கொலை, ராஜஸ்தான் அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

பசுவை கடத்தியதாக இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டதை அடுத்து ராஜஸ்தான் அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
பசுவை கடத்தியதாக இளைஞர் அடித்துக் கொலை, ராஜஸ்தான் அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
Published on

புதுடெல்லி,

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது.

இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது. இச்சம்பவங்களை வன்மையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு, இதை தடுக்க தனியாக சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஓரிரு நாட்களுக்குள் மீண்டும் இத்தகைய கொடூர சம்பவம் மீண்டும் அரங்கேறியது.

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் பசுக்களை ஓட்டிச்சென்று கொண்டிருந்த அக்பர் கான் (வயது 28) என்ற வாலிபரை ஒரு கும்பல் கடந்த 21ந் தேதி அடித்துக்கொன்றது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தலைவர் தெஹ்சீன் பூனவாலா மற்றும் துஷார் காந்தி ஆகியோர் நேற்று தாக்கல் செய்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

இந்த கொலை சம்பவம் தொடர்பான பிரதான வழக்குடன் சேர்த்து, இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கையும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com