தெரு நாய்கள் வழக்கு: 7ம் தேதி தீர்ப்பளிக்கும் சுப்ரீம் கோர்ட்டு

மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் இன்று சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகினர்
டெல்லி,
தலைநகர் டெல்லியில் தெரு நாய்கள் தொல்லை குறித்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு, பின்னர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் இந்த வழக்கின் தரப்பினராக எடுத்துக்கொண்டது.
தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி உத்தரவு ஒன்றை நீதிபதிகள் பிறப்பித்தனர். முன்னதாக டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்குமாறு 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு மாற்றியமைத்தது. அதேபோல், தெருநாய்கள் விவகாரத்தில் மாநில அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், டெல்லி, மேற்கு வங்காளம் , டெல்லி ஆகியவை மட்டுமே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதையடுத்து, எஞ்சிய மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் தமிழகம் உள்பட பல்வேறு மாநில தலைமை செயலாளர்கள் இன்று நேரில் ஆஜராகினர். அதன்பின்னர் மாநில அரசுகள் சார்பில் பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, அனைத்து பிரமாண பத்திரங்களையும் ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், மாநில அரசுகள் சார்பில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தெரு நாய்கள் வழக்கில் வரும் 7ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் ஆஜராக தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.






