‘கியூஆர்’ கோடை ஸ்கேன் செய்தால் ‘யூடியூப் லிங்க்’: 12-ம் வகுப்பு கணித வினாத்தாளில் சர்ச்சை

வினாத்தாள் உண்மையானதா? போலியானதா? என்பதை தெரிந்து கொள்ள கியூஆர் கோடை சி.பி.எஸ்.இ. பயன்படுத்துகிறது.
‘கியூஆர்’ கோடை ஸ்கேன் செய்தால் ‘யூடியூப் லிங்க்’: 12-ம் வகுப்பு கணித வினாத்தாளில் சர்ச்சை
Published on

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் (பிப்ரவரி) 17-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் கணித தேர்வு நடைபெற்றது. பொதுவாக வினாத்தாளில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வினாத்தாள் உண்மையானதா? போலியானதா? என்பதை தெரிந்து கொள்ள கியூஆர் கோடை பயன்படுத்துகிறது. வினாத்தாள்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வழங்கும் பல பாதுகாப்பு அம்சங்களில் இதுவும் ஒன்று.

அவ்வாறு 12-ம் வகுப்பு கணித தேர்வு முடிந்தவுடன் வினாத்தாளில் இருந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்த மாணவர்கள், அது நேரடியாக ஒரு யூடியூப் வீடியோவிற்கு சென்றதாக ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பகிர்ந்து சமூக வலை தளங்களில் விவாதித்தனர். சில நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஒரு ஆங்கில பாடலுக்கு (Never Gonna Give You Up) ஒருவர் நடனம் ஆடுவதுபோல இடம்பெற்றிருந்தது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே வினாத்தாளின் நம்பகத்தன்மை குறித்த அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் 'டிரெண்ட்' ஆனது. இந்த நிலையில் இதற்கு சி.பி.எஸ்.இ. விளக்கம் அளித்துள்ளது. அதில், “கணித தேர்வில் பயன்படுத்தப்பட்ட வினாத்தாள்கள் அனைத்தும் உண்மையானவை. வினாத்தாளின் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசமும் செய்யப்படவில்லை. யூ-டியூப் லிங்க் வந்தாலும், அது வினாத்தாளின் நம்பகத்தன்மையை பாதிக்காது. இந்த தொழில்நுட்ப குளறுபடி குறித்து வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com