

மும்பை,
மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு டாக்கா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, அவரை விசாரணை வளையத்துக்குள் மத்திய அரசு கொண்டு வந்தது. சவூதி அரேபியாவில் இருப்பதாக கூறப்படும் ஜாகீர் நாயக் இந்தியா திரும்ப மறுத்து வருகிறார்.
முன்னதாக இந்தவார தொடக்கத்தில், ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் கைது வாரண்டை புறக்கணித்து வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டார்.
சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டுதல், பயங்கரவாத நடவடிக்கை தடை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தென் மும்பையில் உள்ள அவருக்கு சொந்தமான இஸ்லாமிய சர்வதேச பள்ளி அங்கீகாரம் இன்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக மாநகராட்சியின் கல்வி ஆய்வாளர் பி.பி.சவான் தெரிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இந்த பள்ளிக்கூடத்தை சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி பொறுப்பெடுத்து நடத்தி வருகிறார். மாநகராட்சியின் இந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், பள்ளி நிர்வாகத்தை துன்புறுத்த சதி தீட்டப்படுவதாக குறிப்பிட்டார். பள்ளியில் மொத்தம் 135 மாணவர்கள் படிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.