

ஸ்ரீநகர்,
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையொட்டி கடந்த 5-ந்தேதி முதல் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள், ஜம்மு பிராந்தியத்தில் பெரும்பாலும் விலக்கி கொள்ளப்பட்டன. அங்கு ரத்து செய்யப்பட்ட தொலைபேசி இணைப்புகளை மீண்டும் வழங்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
எனவே இணைப்பு துண்டிக்கப்பட்டவர்களும், புதிய இணைப்பு பெறுபவர்களும் தொலைபேசி நிலையங்களை நாடி வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாக ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அனைத்து தொலைபேசி நிலையங்களும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. புதிய இணைப்பு பெறுபவர்கள், இணையதள இணைப்பையும் சேர்த்து வாங்குவதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு இருப்பதாக தொலைபேசி அலுவலகங்கள் கூறியுள்ளன.
ஆனால் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. அங்கு செல்போன், இணையதள சேவைகள் தொடர்ந்து முடங்கி கிடக்கும் நிலையில், பல இடங்களில் வாகன இயக்கமும், பொதுமக்களின் நடமாட்டமும் கூட குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.
அங்கு இயல்பு நிலை ஓரளவு திரும்பியதால் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் கடந்த வாரமே திறக்கப்பட்டன. இதைப்போல உயர்நிலைப்பள்ளிகள் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டு உள்ளன.
ஆனால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பூஜ்ஜியம் என்ற நிலையிலேயே தொடர்கின்றன. ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் வருகை தந்தாலும், மாணவர்கள் யாரும் பள்ளிக்கூடத்தை எட்டிப்பார்க்கவில்லை. இதனால் ஸ்ரீநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள், பயிற்சி மையங்கள், டியூசன் மையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதைப்போல மாணவர்கள் வராததால் அனந்த்நாக், குல்காம், புல்வாமா, சோபியான், பட்காம் மாவட்டங்களில் பள்ளிகள் மூடியே கிடக்கின்றன. காஷ்மீரில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்களிலும் வகுப்புகள் நடைபெறவில்லை. இந்த பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றன.
காஷ்மீர் பிராந்தியத்தில் நிலைமை தொடர்ந்து பதற்றமாகவே இருப்பதால், எந்த நேரத்திலும் எதுவும் நடைபெறக்கூடும் என்ற அச்சம் காரணமாகவே பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பவில்லை என பெற்றோர் கூறியுள்ளனர். தொலைபேசி, செல்போன் இணைப்புகள் சீராகும் வரை அவர்களை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் வடக்கு காஷ்மீர் மாவட்டங்களான குப்வாரா, பண்டிப்போரா மற்றும் கண்டர்பல் மாவட்டங்களின் சில பகுதிகளில் பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் வந்திருந்தனர். அதேநேரம் தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பிற மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளின் நிலைமை குறித்து அறிய முடியவில்லை.
இதற்கிடையே எந்த அமைப்பும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்காதபோதும் காஷ்மீரின் முக்கியமான பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து மூடியே கிடக்கின்றன. இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஒருசில தனியார் வாகனங்களை தவிர அதிக போக்குவரத்து இல்லாததால் சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று 25-வது நாளாக தொடர்ந்து முடங்கியது. இந்த பிராந்தியத்தின் சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதனால் அந்த பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
தலைநகர் ஸ்ரீநகரில் ஒருசில சாலையோர வியாபாரிகளை தவிர அனைத்து கடைகளும், சந்தைகளும் மூடப்பட்டு உள்ளன. புகழ்பெற்ற ஜாமியா மசூதி தொடர்ந்து மூடியே கிடக்கிறது. இந்த பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட சாலைகளிலும் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.