

சென்னை,
அந்தமான் அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும் எனவும், அடுத்து உருவாகும் புயலுக்கு 'அர்னாப்' என பெயர் வைக்கப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) இரவும், நேற்றும் (வியாழக்கிழமை) பலத்த மழை பெய்தது. சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு தொடங்கிய மழை, இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரையில் பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (23.10.2026) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் உத்தரவிட்டிருந்தார்.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு 2-வது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.