

புதுச்சேரி,
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளோ அல்லது வேறு எந்த வகுப்புகளோ நடத்தப்படக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.
முன்னதாக மே 31-ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், புதுச்சேரியில் வரும் ஜூன் 4-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிலும் ஜூன் 4-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.