

'எல் நினோ' என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பகுதியில், கடல் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பமடைவதை குறிக்கும் ஒரு உலகளாவிய வானிலை நிகழ்வு ஆகும். அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணிப்பின்படி, 'கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உயர்வதற்கு 63 சத வீத வாய்ப்புகள் உள்ளன. இதனால் இந்த 'எல் நினோ' மிகவும் வலுவானது என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது. 1951-ம் ஆண்டுக்கு பிறகு இதுபோன்ற மிக வலுவான 'எல் நினோ' நிகழ்வு 6 முறை மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த நிகழ்வு நடப்பு ஆண்டு முழுவதும் மேலும் வலுப்பெற்று, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் உச்சத்தை எட்டி, அடுத்தாண்டு மார்ச் வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் ஆண்டு மழையளவில் சுமார் 75 சதவீதம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தென்மேற்கு பருவ மழை காலத்தில்தான் கிடைக்கிறது. ஆனால், 'எல் நினோ' வலுவடையும் காலங்களில் இந்தியாவில் பருவமழை கடுமையாக பாதிக்கும். 1951-ம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட 17 'எல் நினோ' ஆண்டுகளில், 12 ஆண்டுகள் இந்தியாவில் இயல்பை விட குறைவான அல்லது வறட்சியான மழையே பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு ஒட்டுமொத்த மழையளவு, நீண்டகால சராசரியில் வெறும் 90 சதவீதமாக மட்டுமே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது உண்மையானால், கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் மிக பலவீனமான பருவமழை ஆண்டாக இது அமையும். அதற்கேற்றப்படி கடந்த ஜூன் 4-ந் தேதி கேரளாவில் தொடங்கிய பருவமழை கடந்த 15-ந் தேதி 32 சதவீத மழைபற்றாக்கு றையை பதிவு செய்துள்ளது. இந்த வறட்சி நிலை அடுத்த மாதமும் நீடித்தால் விவசாயம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.இந்த பருவ மழை பற்றாக்குறை நீடித்தால் நாட்டின் 'காரீப்' பருவப் பயிர்கள் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்படும். இந்தியாவில் அரிசி கையிருப்பு போதுமான அளவில் இருப்பதால், அதன் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால், மழையை மட்டுமே நம்பியுள்ள பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்படும் முக்கியப் பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்.
நீடித்த வறட்சியும், அதிக வெப்பமும் பயிர்களில் பூச்சி தாக்கு தலை அதிகரிக்கும். இதனால் காய்கறி பயிர்கள் அழியும் நிலை ஏற்படும். மேலும், கால்நடைகளுக்கான தீவன பற்றாக் குறையால் பால் உற்பத்தியும் குறையும். இதன் எதிரொலி யாக ஏற்கனவே கடந்த ஜனவரியில் 2.1 சதவீதமாக இருந்த சில்லரை உணவு பணவீக்கம், கடந்த மே மாதத்தில் 4.8 சத வீதமாக உயர்ந்து உள்ளது. 'எல் நினோ' தொடர்ந்தால் விலைவாசி மேலும் விண்ணைத்தொடும்.
'எல் நினோ' விளைவுகள் இந்திய விவசாயம் மட்டுமல்லாமல் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் அசைத்து பார்க் கும் வல்லமை கொண்டது என்று பொருளாதார நிபுணர்கள், விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பருவமழை குறைந்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு இல்லை. இதனால் வீடு கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். 2016-ம் ஆண்டு நிலவிய வறட்சியைப் போல, இந்தியாவின் பல பகுதிகளில் கோடைகாலத்தில் கடு மையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. அணைக்கட்டுகளில் நீர்வரத்து குறைந்தால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு மின்தடை ஏற்படும் சூழல் உருவாகலாம். 'எல் நினோ', அடுத்த ஆண்டு வரை நீடிக்க வாய்ப்புள்ளதால், அடுத்த வரும் ஆண்டுகளில் வழக்கத்தைவிட கோடைகாலத் தில் வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக இருக்கும் என எச்ச ரிக்கப்பட்டுள்ளது.