

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காக்கூர் பகுதியில், திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது, திருமணக் குழுவினர் சென்ற சுற்றுலாப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பயணிகள் வரை காயமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியைச் சேர்ந்த திருமணக் குழுவினர் சுமார் 35 சுற்றுலாப் பேருந்து ஒன்றில் இலஞ்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பேருந்து காக்கூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, இடதுபுறமாகச் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டர் ஓட்டி ஒருவர், திடீரென வலதுபுறமிருந்த பெட்ரோல் பங்கிற்குள் நுழைய முயன்றார்.
அப்போது மழையினால் சாலை ஈரமாக இருந்ததால், ஸ்கூட்டர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் அவசரமாகப் பிரேக் அடித்துப் பேருந்தைத் திருப்பினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த பெட்ரோல் பங்க்கின் பெயர் பலகை தூணில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது.
பேருந்து அதிர்ஷ்டவசமாகப் பெட்ரோல் விநியோக இயந்திரங்கள் மீது நேரடியாக மோதாமல் சற்று தள்ளி கவிழ்ந்ததால், பெரும் தீ விபத்தோ அல்லது கூடுதல் உயிரிழப்புகளோ தவிர்க்கப்பட்டது. விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த பொதுமக்களும் பெட்ரோல் பங்க் ஊழியர்களும் விரைந்து செயல்பட்டு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்துப் பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 30 பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு கூத்தாட்டுகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.