கேரள பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஸ்காட்லாந்து எம்.பி

ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் முக்கிய தலைவரான மார்ட்டின் டே என்பவருடன் நிதின் சந்துக்கு நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே-நிதின் சந்த் திருமணம்
நிதின் சந்த்- மார்ட்டின் டே
Published on

திருவனந்தபுரம்,

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே, கேரளப் பெண்ணான நிதின் சந்தை குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்தார்.

10 ஆண்டு கால காத்திருப்பு

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிறவம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின் சந்த் (வயது 49). இவர் கடந்த 2008-ம் ஆண்டு உயர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றி வந்தார். அப்போது ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் முக்கிய தலைவரான மார்ட்டின் டே (வயது 55) என்பவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.

அவர்கள் இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டிலேயே இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாகப் பதிவுத் திருமணம் முடிந்துவிட்டது. எனினும், தனது சொந்த ஊரான கேரளாவில், குருவாயூர் கோயிலில் வைத்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்பது நிதினின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது.

தாமதத்திற்கான காரணங்கள்

இந்தத் திருமணத்தை முன்னரே நடத்த திட்டமிட்டிருந்தாலும், 2018-ல் கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு, அதனைத் தொடர்ந்து வந்த கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று மற்றும் அரசியல் ரீதியான தேர்தல் பணிப்பளு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இவர்களது ஆசை தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

கேரள உடையில் ஸ்காட்லாந்து எம்பி

அனைத்து தடைகளையும் தாண்டி, கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மணமகன் மார்ட்டின் டே கேரளாவின் பாரம்பரிய உடையான ‘முண்டு’ (வேட்டி) மற்றும் மேலாடை அணிந்து திருமாங்கல்யத்தை கட்டினார். மணமகள் நிதின் சந்த் பாரம்பரிய பட்டுப் புடவையில் காட்சியளித்தார். இந்தத் திருமண விழாவில் மணமகளின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டு தம்பதியரை வாழ்த்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com