பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்; உளவுத்துறை எச்சரிக்கை

குடியரசு தின விழாவில் பிரதமரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்; உளவுத்துறை எச்சரிக்கை
Published on

புதுடெல்லி,

நாட்டின் 73-வது குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஜனாதிபதி மூவர்ண கொடியை ஏற்றி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டெல்லி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்தநிலையில் குடியரசு தின கொண்டாடட்டத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்து உள்ளது.

பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தை சேர்ந்த குழுக்களிடம் இருந்து இந்த அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயர் பதவியில் இருக்கும் பிரமுகர்களை குறி வைத்தும், பொதுக்கூட்டங்கள், முக்கிய நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் நெரிசலான இடங்களையும் இலக்காக வைத்து உள்ளனர்.

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் எதிர்ப்பு குழுக்கள் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் உளவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. குடியரசு தின விழாவில் பிரதமரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com