நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு மீறல்.. சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு

சுவரைத் தாண்டி வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபரை பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் கைது செய்தனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற வளாகத்திற்குள் இன்று காலை 6.30 மணிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மரத்தின் வழியாக ஏறி நாடாளுமன்ற வளாகத்திற்குள் குதித்துள்ளார்
பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள், மர்ம நபரைப் பிடித்தநிலையில், தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக பீகாரில் தேர்தல் நடைபெற உள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளிகள், போராட்டங்களுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
2023-ம் ஆண்டு இதேபோன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் நடந்தது, சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் என்ற இரண்டு ஊடுருவும் நபர்கள் பொது கேலரியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை அறைக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) அமர்ந்திருந்த மேசைகள் மீது குதித்து மஞ்சள் நிற புகை குப்பியை வீசினார். இந்த சம்பவங்கள் நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது கடுமையான கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில், இன்று நடந்த பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக முழு அளவிலான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.






