ஜார்கண்ட்: மாவோயிஸ்டுகள் புதைத்த 120 வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

ஜார்கண்டில் மாவோயிஸ்டுகளால் புதைக்கப்பட்ட 120 மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

ராஞ்சி,

ஜார்கண்டில் லதேஹார் மாவட்டத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், மாவோயிஸ்டுகளால் புதைக்கப்பட்ட 120 மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை (ஐஇடி) கண்டுபிடித்தனர்.

முன்பு மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருந்த லதேஹர் மாவட்டத்தின் புடாபஹாட் பகுதியில் தற்போது பாதுகாப்பு படையினர் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் புடாபஹாட் பகுதியில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருட்களை கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் செயலிழக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கடந்த வியாழக்கிழமை லதேஹர் மற்றும் கர்வா மாவட்டங்களில் 15 கிலோ எடையுள்ள குக்கர் வெடிகுண்டு, ஒரு கிளைமோர் மைன், மூன்று டெட்டனேட்டர்கள், ஒரு மோட்டோரோலா வயர்லெஸ் செட், இரண்டு வெடிமருந்து பைகள் மற்றும் நக்சல் இலக்கியங்கள் ஆகியவற்றை கண்டறிந்து கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள கோல்ஹான் பகுதியில் ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் தலைவர் மிசிர் பெஸ்ரா சாகரை கைது செய்யும் ஆபரேஷனில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். இந்த நடவடிக்கையின் போது, பாதுகாப்புப் படையினர் 16 ஐஇடிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com