

சண்டிகார்,
இருபெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் சிங் குற்றவாளி என வெள்ளிக்கிழமை சிபிஐ கோர்ட்டு அறிவித்ததும் பெரும் வன்முறை பஞ்சாப், அரியானா மாநிலங்களில் வெடித்தது. இதில் 31 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். திங்கள்கிழமை சாமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. வெள்ளிக்கிழமை சாமியாரை பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் காப்பாற்ற அவருடைய ஆதரவாளர்கள் திட்டமிட்டு இருந்து உள்ளனர், ஆனால் போலீஸ் அவர்களுடைய திட்டங்கள் அனைத்தையும் முறியடித்துவிட்டது என மூத்த போலீஸ் அதிகாரி கூறிஉள்ளார்.
சாமியார் குர்மீத் சிங்கை தப்ப வைக்கவும், அவரை தலைமறைவாக்கவும் அவருடைய ஆதரவாளர்கள் திட்டமிட்டது தெரியவந்ததும், துணை கமிஷ்னர் சுமித் குமார் தலைமையிலான சிறப்பு படை எச்சரிக்கப்பட்டது, சிறப்பு படையானது சாமியாரின் ஆதரவாளர்கள் முயற்சியை முறியடித்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சாமியார் தன்னுடைய சிறப்பு படைக்கு தனி ரகசிய குறியீட்டு வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்.
குர்கானில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜிபி கேகே ராவ், சிபிஐ நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்ததும் சாமியார் குர்மீத் சிங் தன்னுடைய ஆதரவாளர்களிடம் ரெட் பேக் கேட்டார். இது சிர்சா தலைமை ஆசிரமத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. ரெட் பேக்கில் அவருடைய துணி இருப்பதாக கூறினார் சாமியார் குர்மீத் சிங். ஆனால் இது அவருடைய ஆதரவாளர்களை தூண்ட பயன்படுத்தப்பட்ட சிறப்பு ரகசிய குறியீட்டு சொல்லாகும் என பின்னர் தெரியவந்தது. இதன்மூலம் ஆதரவாளர்களை திரட்டி கடைசி நேரத்தில் தப்பிக்கலாம் என முயற்சி செய்து உள்ளார். வெளியே நின்ற சாமியார் வாகனத்தில் இருந்து பேக்கை எடுத்துவரும் விதமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
ரெட் பேக்கை எடுத்ததும் வன்முறையானது பஞ்ச்குலாவில் தொடங்கிவிட்டது, இதனையடுத்துதான் இது ரகசிய குறியீடு என எங்களுக்கு தெரியவந்தது என போலீஸ் தெரிவித்து உள்ளது.
சாமியாரை காப்பாற்ற கோர்ட்டு வளாகம் மற்றும் பிற பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் முன் கூட்டியே சாமியார் தரப்பிலும் செய்யப்பட்டு உள்ளது எனவும் போலீஸ் தெரிவித்து உள்ளது. போலீஸ் கண்ணில் மண்ணை தூவ அவர்கள் செய்த எந்தஒரு திட்டமும் பலன் அளிக்காத வண்ணம் பாதுகாப்பு அரண் போலீஸ் தரப்பில் போடப்பட்டது, அவரை ஹெலிகாப்டர் மூலம் ரோக்தாக் சிறைக்கு கொண்டு சென்றுவிட்டது. இப்போது சாமியார் சிறையில் அடைபட்டு உள்ளார். அவருக்கு எந்தஒரு சிறப்பு ஏற்பாடும் செய்து கொடுக்க கூடாது என சிபிஐ நீதிமன்றம் கடும் உத்தரவை பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.