ஈஸ்வரப்பா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: சித்தராமையா

மந்திரி ஈசுவரப்பாவை நீக்கும் வரை காங்கிரசின் போராட்டம் தொடரும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
ஈஸ்வரப்பா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: சித்தராமையா
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் இன்று சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்லி செங்கோட்டையில் காவி கொடி ஏற்றுவதாக மந்திரி ஈசுவரப்பா கூறினார். அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சட்டசபையில் கோரினேன். இதுகுறித்து நாங்கள் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். அரசியல் சாசனத்திற்கு பதிலாக மனுநீதி சட்டம் கொண்டு வரப்பட்டால் ஈசுவரப்பா மந்திரியாக இருக்க முடியுமா?.

ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளை மேய்த்து கொண்டும், குப்பை அள்ளுபவர்கள் குப்பையை அள்ளி கொண்டும் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஈசுவரப்பா விவரம் தெரியாமல் பேசுகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிமையாக இருக்கிறார். தேசிய கொடியை அவமதித்த ஈசுவரப்பாவை நீக்க கோரி நாங்கள் சபையில் தர்ணா நடத்தினோம். நாளை சபை தொடங்குவதற்குள் ஈசுவரப்பாவை நீக்க வேண்டும்.

அவரை நீக்கும் வரை நாங்கள் சபைக்கு உள்ளேயேம், வெளியேயும் போராட்டம் நடத்துவோம். அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டியவர் கவர்னர். ஈசுவரப்பாவை நீக்கும்படி அரசுக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும். தேசிய கொடியை அவமதித்து தேசத்துரோகம் இழைத்துள்ளார். அவருக்கு மந்திரி பதவியில் நீடிக்க தகுதி இல்லை. அவர் மன்னிப்பு கேட்டாலும் நாங்கள் எங்கள் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

இதனிடையே, இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, ஈஸ்வரப்பா தனது கருத்துக்கு விளக்கம் கொடுத்து விட்டார். செங்கோட்டையில் காவிக்கொடி உடனடியாக பறக்கவிடப்படும் என அவர் கூறவில்லை. அடுத்த 300 முதல் 500 ஆண்டுகளில் பறக்கும் என்றே கூறினார். அது நடக்கலாம், நடக்காமலும் போகலாம். தேசியக்கொடியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதை எவரும் அவமரியாதை செய்யக்கூடாது என்றும் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com