விமானப்படை அதிகாரியை பேஸ்புக்கில் இளம்பெண்கள் போன்று தோன்றி மயக்கிய பாகிஸ்தான் உளவுத்துறை

விமானப்படை அதிகாரியை பேஸ்புக்கில் இளம்பெண்களை போன்று தொடர்பு கொண்டு பாகிஸ்தான் உளவாளிகள் மயக்கி உள்ளனர்.
விமானப்படை அதிகாரியை பேஸ்புக்கில் இளம்பெண்கள் போன்று தோன்றி மயக்கிய பாகிஸ்தான் உளவுத்துறை
Published on

புதுடெல்லி,

இந்திய விமானப்படை அதிகாரி அருண் மார்வஹா (வயது 51) பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இரகசியமாக முக்கிய தகவல்களை கசியவிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டார். பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் அவரிடம் தகவலை பெற்று உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. போலீஸ் அருண் மார்வஹாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது, அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

வருங்கால இந்திய முப்படை அதிகாரிகளுக்கு ஆசைகாட்ட முயற்சித்த பாகிஸ்தான் உளவுத்துறை!

இவ்விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் பாகிஸ்தான் உளவாளிகள் இருவர் அவரை பேஸ்புக்கில் இளம்பெண்கள் போன்று தோன்றி, பேசி மயக்கி தகவல்களை பெற்று உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது.

டெல்லி சிறப்பு படை போலீஸ் அதிகாரிகள் தகவலின்படி, அருண் மார்வஹா இரு பாகிஸ்தானிய உளவாளிகளிடம் தகவல்கள், ஆவணங்களை பகிர்ந்துக் கொண்டு உள்ளார். அவர்கள் பேஸ்புக்கில் பெண்களாக தொடர்பு கொண்டு ஏமாற்றி ஷாட்டிங் செய்து உள்ளனர். பாகிஸ்தான் உளவாளிகள் கிரண் ரந்த்வா மற்றும் மஹிமா படேல் என்ற பெண்கள் பெயரில் இரு போலி கணக்குகளை பேஸ்புக்கில் தொடங்கி, அருண் மார்வஹாவிடம் ஆசைவார்த்தை கூறிஉள்ளனர், என்பது தெரியவந்து உள்ளது.

இந்திய விமானப்படையின் தலைமையகத்தில் முக்கியமான ஆவணங்களை புகைப்படம் எடுத்து அதனை வாட்ஸ்-அப் மூலமாக பாகிஸ்தான் உளவாளிகளுக்கு அனுப்பி உள்ளார் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

சில மாதங்களுக்கு முன்னதாக பேஸ்புக்கில் மாடல்கள் என்ற பெயரில் பாகிஸ்தான் உளவாளிகள் கணக்கு தொடங்கி உள்ளனர். அவர்களுடன் அருண் மார்வஹா நண்பராகி உள்ளார். வாட்ஸ்-அப்பில் அவர்களுடன் தொடர்ச்சியாக குறுஞ்செய்தி அனுப்பி வந்து உள்ளார். ஆபாச படங்களை வெளியிட்டு அருண் மார்வஹாவை பாகிஸ்தான் உளவாளிகள் மயக்கி உள்ளனர். அவரிடம் நம்பிக்கையானவர்கள் போன்று காட்டிஉள்ளனர். அவர்களுடைய பேச்சு மற்றும் புகைப்படங்களில் மயங்கிய அதிகாரி அருண் மார்வஹா தகவல்களாக அனுப்பி உள்ளார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மார்வஹா பாகிஸ்தான் உளவாளிகளுக்கு அனுப்பிய ஆவணங்கள் அனைத்தும் இந்திய விமானப்படை பயிற்சி தொடர்பான தகவல்கள் என தெரியவந்து உள்ளது.

இந்திய விமானப்படையில் உளவு தடுப்புப் பிரிவினரின் வழக்கமான சோதனையில் விமானப்படையின் முக்கிய தகவல்கள் டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு பரிமாறப்படுவது தெரியவந்தது. விமானப்படையின் தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல்கள் கசிந்து வெளியே செல்வதாக கண்டறிந்த உளவு தடுப்பு பிரிவு, உயர் அதிகாரிகளை உஷார்படுத்தியது. இதனையடுத்து டெல்லி தலைமையகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர். அப்போது அருண் மார்வஹா விதிமுறைகளுக்கு எதிராக குறிப்பிட்ட சில எலெட்ரானிக்ஸ் கருவிகளை அலுவலகத்திற்கு எடுத்துவருவது தெரியவந்தது. விசாரணையில் அவர்தான் அனுப்பினார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த ஜனவரி 31-ம் தேதி அருண் மார்வஹா கைது செய்யப்பட்டார்.

அவருடைய செல்போன்கள் மற்றும் சமூக வலைதள பயன்பாடு போன்றவை சோதனையிடப்பட்டது. அதில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஏஜெண்டாக இவர் செயல்பட்டு வந்தது உறுதிப்பட்டுள்ளது. அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் துறையின் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சிறப்பு பிரிவு போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருகிறது. முக்கியமான ஆவணங்களை அணுகியதை அவரும் விசாரணையில் ஒப்புக்கொண்டார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com