2018 கர்நாடக சட்டசபை தேர்தலை விட, நடப்பு தேர்தலில் பறிமுதலான பணம் 4 மடங்கு அதிகம்; தேர்தல் ஆணையம்

2018 கர்நாடக சட்டசபை தேர்தலை விட, நடப்பு தேர்தலில் பறிமுதலான பணம், பொருட்கள் 4 மடங்கு அதிகம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
2018 கர்நாடக சட்டசபை தேர்தலை விட, நடப்பு தேர்தலில் பறிமுதலான பணம் 4 மடங்கு அதிகம்; தேர்தல் ஆணையம்
Published on

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் நாளை (10-ந்தேதி) நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 13-ந்தேதி நடைபெறும். தேர்தலில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற 113 தொகுதிகளை தனிப்பட்ட முறையில் கட்சியானது கைப்பற்ற வேண்டும். தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.

தேர்தல் களத்தில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. பேரணி, பொது கூட்டம் போன்றவற்றை நடத்தி வாக்குறுதிகளை வழங்கின. கட்சியின் தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்து உள்ளது. தேர்தலை முன்னிட்டு, கர்நாடகாவில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் கைப்பற்றப்பட்டன.

இதுபற்றி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், கடுமையான கண்காணிப்பு, விரிவுப்படுத்தப்பட்ட கவனிப்பு பணி, அண்டை மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் மற்றும் வெவ்வேறு விசாரணை அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவற்றால், கர்நாடகாவில் இந்த முறை பணம் புழங்குவது மற்றும் விநியோகிப்பது ஆகியவை கண்காணிக்கப்பட்டன என தெரிவித்து உள்ளது.

இதன்படி, தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைப்பிடித்து, பறக்கும் படை அதிரடி சோதனைகளை நடத்தியது. இந்த சோதனைகளில் இதுவரை ரூ.375.61 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த மார்ச் 2-வது வாரத்தில் கர்நாடகாவுக்கு ஆணைய அதிகாரிகள் வருகை தந்தது முதல், தேர்தல் தேதி அறிவிப்பு வரையில், பல்வேறு அமலாக்க அமைப்புகள் ரூ.83.78 கோடி பறிமுதல் செய்திருந்தது.

தேர்தல் நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்ட பின்னர், ரூ.288 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை முடக்கி உள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இது, கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் கைப்பற்றப்பட்ட மதிப்பை விட, 4 மடங்கு அதிகம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com