எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக சிவசேனா வாக்களிக்கும்: மத்திய மந்திரி அனந்த குமார் நம்பிக்கை

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக சிவசேனா வாக்களிக்கும் என்று மத்திய மந்திரி அனந்த குமார் தெரிவித்தார். #NoConfidenceMotion
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக சிவசேனா வாக்களிக்கும்: மத்திய மந்திரி அனந்த குமார் நம்பிக்கை
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், மழைக்கால கூட்டத்தொடராவது சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி, நாட்டு மக்களிடம் எழுந்து உள்ளது. மக்களவை கூடியதும், சபாநாயகர் கேள்வி நேரத்தை அறிவித்த உடனேயே தெலுங்குதேசம், சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு போர்க்கோலம் பூண்டனர். இன்னொரு பக்கம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று பல்வேறு பிரச்சினைகளையொட்டி முழங்க சபையில் அமளி ஏற்பட்டது.

பின்னர் பூஜ்ய நேரத்தின்போது தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளதால் அந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக அவர் கூறினார்.மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது, அனைத்து தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் மிக முக்கியமான கட்சியான சிவசேனா நிலைப்பாடு பற்றி மத்திய மந்திரி அனந்தகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த அனந்தகுமார், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி வாக்கு அளிக்கும் என்றார்.

மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்து உள்ள நிலையில், முதல் முறையாக நாளை நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தாலும்கூட, அது ஓட்டெடுப்பில் வெற்றி பெறாது என்பதை சபையில் தற்போது உள்ள கட்சிகளின் பலம் தெளிவாக காட்டுகிறது.

535 உறுப்பினர்களைக் கொண்டு உள்ள மக்களவையில் பாரதீய ஜனதா கட்சிக்கு சபாநாயகருடன் சேர்த்து 274 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு 18 எம்.பி.க்கள் இருக்கின்றனர். ஆதரிக்கிற பிற சிறிய கட்சிகளின் உறுப்பினர்களையும் கணக்கில் கொள்கிறபோது பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அரசுக்கு மொத்தம் 313 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com