

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் கடந்த 22, 27 ஆகிய தேதிகளில் கொலீஜியம் கூட்டம் நடைபெற்றது.
இதில், பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசேகர், மத்தியபிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அருண் பாலி மற்றும் சுப்ரீம்கோர்ட்டு மூத்த வக்கீல் வி.மோகனா ஆகிய 5 பேரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதில் நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மூத்த வக்கீல் வி.மோகனா, தமிழகத்தின் கோவையைச் சேர்ந்தவர் ஆவார். இதன் மூலம் தமிழகத்தில் இருந்து நீதிபதி பானுமதியைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகும் 2-வது பெண் என்ற பெருமையை இவர் பெறுகிறார். மேலும், இவர் தற்போதைய சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி கே.வி.விஸ்வநாதனுடன் ஒரே கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.