

ஐதராபாத்,
ஐதராபாத்தின் முக்கிய ஐடி நிறுவனத்தின் நடைபாதையில் பெரிய மலைப்பாம்பு ஒன்றை வாலிபர் ஒருவர் வெறும் கைகளால் பிடித்து, கையில் சுற்றிக்கொண்டே ஸ்கூட்டரில் சென்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் துர்கம் செருவு பகுதியில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தின் அருகே கடந்த 17-ந்தேதி அன்று இரவு பெரிய மலைப்பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் நடமாடும் பகுதியில் பாம்பு வந்ததால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்து அலறியடித்து ஓடினர்.
அப்போது, அங்கிருந்த மென்பொருள் துறையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், எந்தவித பயமும் இன்றி அந்த பெரிய மலைப்பாம்பை வெறும் கைகளால் அலேக்காகத் தூக்கினார். மேலும், அந்த பாம்பைத் தனது கையில் சுருள் போல சுற்றிக்கொண்டு, மற்றொரு நபரின் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சாதாரணமாக பயணித்தார். அங்கிருந்த ஊழியர்கள் இந்த விசித்திரமான மற்றும் ஆபத்தான சம்பவத்தை தங்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. மென்பொருள் ஊழியர் என்பதால் பலர் "இவர் ரியல் லைப்பிலும் 'மலைப்பாம்பு' டெவலப்பராக மாறிவிட்டார்" என நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வனத்துறை உதவியின்றி பொதுவெளியில் இப்படி ஆபத்தான முறையில் வனவிலங்குகளை கையாள்வது சட்டப்படி தவறு என்றும், இது உயிருக்கே ஆபத்தாய் முடியலாம் என்றும் நெட்டிசன்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.