

புதுடெல்லி,
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தொலைதொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி நேற்று தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் அபிஷேக் தயாள், நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் தனிக்கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்படுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஆமாம். 2ஜி வழக்கு தீர்ப்பின் அடிப்படை அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டன. விசாரணையின்போது, குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்காக அளித்த ஆதாரங்கள், கோர்ட்டால் அதன் சரியான முன்னோக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த விவகாரத்தில் தேவைப்படுகிற சட்ட ரீதியிலான தீர்வுகளை சி.பி.ஐ. எடுக்கும் என பதில் அளித்தார்.
பொதுவாக எந்தவொரு வழக்கிலும், கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறபோது, அதை மாதக்கணக்கில் ஆராய்ந்துதான் அப்பீல் செய்வது குறித்து சி.பி.ஐ. முடிவு எடுக்கும்.
ஆனால் 2 ஜி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்ட சில மணி நேரத்திலேயே அப்பீல் செய்யப்போவதாக சி.பி.ஐ. அறிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் மேல்முறையீடு
ஸ்வான் தொலைதொடர்பு நிறுவனத்தால் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக மற்றொரு வழக்கும் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குற்றப்பத்திரிகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கிலும் அனைவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடம் இல்லாத வகையில் நிரூபிக்கப்படவில்லை என்று கருதி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு இயக்குனரக அதிகாரிகள் கூறும்போது, தனிக்கோர்ட்டின் உத்தரவை ஆராய்வோம். அதன்பின்னர் வழக்கு விசாரணை தகவல்களுடனும், ஆதாரங்களுடனும் ஐகோர்ட்டின் கதவைத்தட்டுவோம் என கூறினர்.
மேலும், சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டதாலேயே அமலாக்கப்பிரிவு இயக்குனரக வழக்கும் நிராகரிக்கப்பட்டதா அல்லது வேறு காரணங்கள் உண்டா என்பதை ஆராய்வோம் என்றும் கூறினர்.