சபரிமலையில் இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனி வரிசை

கூட்ட நெரிசலை தவிர்க்க சபரிமலையில் இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனி வரிசை அமல்படுத்தப்படுகிறது.
சபரிமலையில் இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனி வரிசை
Published on

சபரிமலை,

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதில் ஒரு சில நாட்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இந்த வரலாறு காணாத கூட்டத்தால் நெரிசலில் சிக்கி பக்தர்கள் அவதிக்குள்ளானார்கள்.

பக்தர்கள் எண்ணிக்கை குறைப்பு

இதனைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின் பேரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

அதாவது ஒரு நாளில் 90 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது.

சிறுவர்கள்-முதியவர்களுக்கு தனி வரிசை

இந்த நிலையில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர் மற்றும் முதியவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நிற்பதால் சிரமப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு தனி வரிசை அமைப்பது தொடர்பாக கேரள ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. எனவே பம்பையில் தேவஸ்தான மந்திரி கெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தனி வரிசை ஏற்படுத்துவது என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் சபரிமலை தரிசனத்திற்கு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர், சிறுமிகள் மற்றும் முதியவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் தனி வரிசை அமலுக்கு வருகிறது.

மேலும் தரிசனம் முடிந்து ஊர் திரும்பும் பக்தர்களுக்கு பம்பையில் இருந்து நிலக்கல் செல்ல போதிய பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட கலெக்டருக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com