தன்னார்வலர் கூறிய புகாரில் உள்நோக்கம், ரூ.100 கோடி இழப்பீடு கோர முடிவு: சீரம் நிறுவனம் தகவல்

கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து, அதன் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துகிறது.
தன்னார்வலர் கூறிய புகாரில் உள்நோக்கம், ரூ.100 கோடி இழப்பீடு கோர முடிவு: சீரம் நிறுவனம் தகவல்
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து, அதன் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துகிறது.

அந்த வகையில் சென்னையில் 40 வயதான வர்த்தக ஆலோசகர் ஒருவர் தானாக முன்வந்து தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கடந்த மாதம் 1-ந் தேதி இந்த தடுப்பூசி சோதனையில் பங்கேற்றார். ஆனால் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு கடுமையான நரம்பு மற்றும் உளவியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையொட்டி அவரது சார்பில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கும், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் தலைமை செயல் அதிகாரிக்கும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கும் இன்னும் தொடர்புடைய சிலருக்கும் சட்ட நிறுவனம் ஒன்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதில் அவர் தனக்கு ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும், இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை, தயாரிப்பு, வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரி உள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீரம் நிறுவனம், தன்னார்வலருக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்புக்கும் தடுப்பு மருந்துக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளது. இது குறித்து சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தன்னார்வலரின் மருத்துவ நிலை குறித்து அனுதாபம் கொள்கிறோம். தன்னார்வலரின் உடல் நல பாதிப்புக்கும் தடுப்பு மருந்து பரிசோதனைக்கு முற்றிலும் எந்த தொடர்பும் கிடையாது. தற்போது விடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ் தவறான கருத்துக்களையும் உள்நோக்கத்தையும் கொண்டது. தன்னார்வலர் தனக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பை தவறாக கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையுடன் தொடர்புபடுத்துகிறார்.

இது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. ஏனெனில், உடல் நல பிரச்சினைகள் தடுப்பூசி சோதனையால் ஏற்படவில்லை என மருத்துவக் குழு தன்னார்வலரிடம் குறிப்பிட்டு விளக்கிய போதிலும், நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொதுவெளிக்கு சென்றுள்ளார். எனவே, 100 கோடி ரூபாய் இழப்பீடு கோர உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com