

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தடுப்பூசியின் தேவை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
இதில் நாட்டிலேயே மிக அதிகளவில் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் நிறுவனம் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.,வாக இருப்பவர் அடார் பூனவாலா.
இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் சி.இ.ஓ. அடார் பூனவாலாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'ஒய்' பிரிவில் இரண்டு கமோண்டக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் பணியாற்றுவர்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீரம் நிறுவனம் சி.இ.ஓ.,விற்கு சி.ஆர்.பி.எப் ., சார்பில் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும். அடார் பூனவாலா இந்தியாவில் எந்த இடத்திற்கும் பயணித்தாலும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவில் வரும் 1-ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்க உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசி விலையை கடந்த 21-ம் தேதி சீரம் இன்ஸ்டிடியூட் உயர்த்தியது. தங்கள் உற்பத்தியில் 50 சதவிகிதத்தை மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைக்கு வழங்குவோம் என்று கூறிய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசி விலையை உயர்த்தியது.
அதன்படி, மாநில அரசுக்கு ஒருடோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி விலை 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒருடோஸ் கோவிஷீல்டு விலை 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்தது.
இந்நிலையில் மாநில அரசுகளுக்கு வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி விலையை சீரம் நிறுவனம் சற்று குறைத்துள்ளது. இன்று வெளியான புதிய அறிவிப்பின்படி, மாநில அரசுக்கு ஒருடோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி விலை 400 ரூபாயில் இருந்து 100 ரூபாய் குறைக்கப்பட்டு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது