

புதுடெல்லி,
மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்து வினியோகித்து வருகிறது. அடுத்த மாதம் மத்திய அரசுக்கும், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் மொத்தம் 21 கோடியே 90 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வழங்கப்போவதாக அந்நிறுவனம் நேற்று தெரிவித்தது.
இதுகுறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் சீரம் நிறுவன இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் கூறுகையில், தடுப்பூசி உற்பத்தி திறனை நாங்கள் அதிகரித்துள்ளோம். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மத்திய அரசுக்கு இதுவரை 66 கோடிக்கு மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகளை வழங்கி இருக்கிறோம். ஏற்கனவே பெற்ற ஆர்டரின்படி, டிசம்பர் 31-ந்தேதிக்குள் 66 கோடி தடுப்பூசி வழங்குவோம். இத்துடன், இந்த ஆண்டு 130 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்கிய பெருமையை பெறுவோம் என்று அவர் கூறினார்.
உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை அடுத்த மாதத்தில் இருந்து ஏற்றுமதி செய்வோம் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறிய நிலையில், சீரம் நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது.